கேரளா மாநிலத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (12.12.2024) வைக்கம் நகரில் நடைபெற்றது. இதனையொட்டி தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைத்தார். இந்த விழாவில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன் உட்பட கேரள அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அதோடு வி.சி.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த விழாவின் ஒரு பகுதியாகத் தந்தை பெரியார் நினைவகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு இந்த விழாவில் பங்கேற்ற தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கடந்த ஆண்டு வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைத்து என்னை அழைத்திருந்தார். இப்பொழுது தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. நாங்கள் அழைத்ததன் பேரில் முதல்வர் பினராயி விஜயன் வந்துள்ளார். இந்தியாவில் உள்ள ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராக பினராய் விஜயன் உள்ளார்.
பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் கட்டுவதற்கான அனுமதியைத் தந்தது முதல் எல்லா முன்னெடுப்புகளுக்கும் பினராய் விஜயன் உறுதுணையாக இருந்துள்ளார். அவருக்கும், கேரள அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது அன்பையும் மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ அதைப்போலவே இந்த நினைவகமும் கம்பீரமாக அழகியலோடு உருவாக்கியுள்ள தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவை மனதார பாராட்டுகிறேன். அவருக்கும், துறையின் அதிகாரிகளுக்கும் அலுவலகர்களுக்கும், கட்டுமான நிபுணர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். இதற்காகப் பல முன்னெடுப்புகளைச் சிறப்பாகச் செய்த செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனும் நன்றியும், பாராட்டுக்களும், வாழ்த்துக்கள்.
கேரளா, இயற்கை கொஞ்சும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளம் ஆகும். கல்வியிலும் அரசியல் விழிப்புணர்ச்சிகளும் முன்னேறியுள்ள மாநிலம் கேரளா ஆகும். அப்படிப்பட்ட மண்ணில் சமூக அரசியல் போராட்டம் வெற்றி பெற்றதன் சின்னமாக இந்த வைகை நினைவகம் உள்ளது. கேரளாவிற்கு வருகின்ற எல்லோரும் கட்டாயம் வைக்கம் நினைவகத்தைப் பார்க்க வேண்டும். சமூகக் கொடுமைகளை எதிர்த்து நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கேரள தலைவர்கள் வரிசையாக எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள். அப்போது தமிழகத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியாருக்கு அழைப்பு விடுத்தார்கள். அந்த கடிதம் கிடைத்ததும் தந்தை பெரியார் ஏப்ரல் 13ஆம் நாள் கேரளாவிற்கு வந்தார்.
ஏதோ ஒரு நாள் வந்து விட்டு கேரளாவில் அடையாள போராட்டம் நடத்திவிட்டுத் திரும்பிச் செல்லவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மாத காலம் கேரளாவில் தங்கி போராட்டத்தை நடத்தினார். இரண்டு முறை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 74 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். மேலும் சிறைச்சாலையில் அரசியல்வாதிகளுக்கான மரியாதை தரப்படாமல், பெரியார் கொடுமைப்படுத்தப்பட்டார். இதனைக் கேரள தலைவர்களில் ஒருத்தராக உள்ள கே.பி. கேசவன் மேணன் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்” எனப் பேசினார்.