2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸுக்கு இடையே மோதல் மூண்டுள்ளது. அண்மையில் மும்பை சென்ற மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் அம்மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்த மம்தா, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று எதுவும் இல்லை” என தெரிவித்தார்.
இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மம்தா தலைமையில் மூன்றாவது அணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. ஆனால் சிவசேனா, ‘காங்கிரஸை தேசிய அரசியலிலிருந்து ஒதுக்கிவைத்து அரசியல் செய்வது இன்றைய பாசிசப் போக்கை வலுப்படுத்துவது போன்றது" என்றும், "பலமான எதிர்க்கட்சி கூட்டணியை விரும்புபவர்கள் தாங்களாகவே முன்வந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்" என்றும் கூறியது.
இந்தநிலையில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் இன்று ராகுல் காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமையேற்குமாறு வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "எதிர்க்கட்சி ஒன்றுதான் இருக்க வேண்டும், ஒன்றுக்கு மேல் இருக்க முடியாது. காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி ஒற்றுமை சாத்தியமில்லை. 2024க்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம். அதற்கு அந்த முயற்சிக்கு தலைமை ஏற்குமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக் கொண்டேன். ராகுல் காந்தி தலைமையேற்று சுதந்திரமாக வழி நடத்தவேண்டும். பல பிராந்திய கட்சிகள் காங்கிரசுடன் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.