உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் ஆன்மிகக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அச்சமயத்தில் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். ஹாத்ரஸ் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது ஹாத்ரஸில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு மக்களவையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உத்தரப்பிரதேச அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மீட்புப் பணிகளில் உத்தரப்பிரதேச அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.