கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைக் கடந்து தற்போது டெல்லி வந்தடைந்துள்ளது. டெல்லியில் இருக்கும் ராகுல் காந்தி அங்கிருந்து உத்தரப் பிரதேசம் செல்ல இருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற பயணத்தில் அண்மையில் கமல்ஹாசனும் இணைந்து தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வரும் ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடக்க இருக்கும் பேரணியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளாகவும், அவர்கள் இருவரும் பங்கேற்க இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. அதே நேரம் இக்கட்சிகளின் பங்கேற்பு 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரசியல் கூட்டணி பற்றிய கருத்தை இப்போது ஏற்படுத்தக்கூடும் என்பதால் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் யாத்திரையில் பங்கேற்கத் தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.