மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேட்கர், உதவி ஆட்சியராக சேருவதற்கு முன்பு தனக்கென தனி அலுவலகம், கார் மற்றும் வீடு வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் நச்சரித்து வந்ததாகக் கூறப்பட்டது. மேலும், புனே கூடுதல் ஆட்சியர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறைக்கு வெளியே இருந்த கூடுதல் ஆட்சியரின் பெயர் பலகையை தூக்கிவிட்டு, பூஜா கேட்கர் தனது பெயர் பலகையை மாற்றி அந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் ஒப்பந்தக்காரர் ஒருவர் கொடுத்த விலை உயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்துக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், ஓய்வு பெற்ற மகாராஷ்டிரா அரசு அதிகாரியான பூஜாவின் தந்தை திலீப் கேத்கர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பூஜா கேட்கர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பர் சேர்ந்தவர் எனக் கூறியும், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி எனப் போலி சான்றிதழ் வழங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனதாக சர்ச்சை எழுந்தது. பூஜா கேட்கர் மீதான புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு, தனி நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, பூஜா கேட்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, சாலையோர நடைபாதையை பூஜாவின் குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, புனே நகராட்சி சார்பில் அனுப்பிய நோட்டீஸூக்கு பூஜாவின் குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால் புல்டோசர் மீது பூஜாவின் ஆக்கிரமிப்பு தடுப்புச்சுவர் நேற்று இடிக்கப்பட்டது.
இந்த நிலையில், பூஜாவின் தாயார் மனோரமா கேட்கரை போலீசார் கைது செய்துள்ளனர். நில விவகாரம் தொடர்பாக, புனே மாவட்டம் தத்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை, மனோரமா கேட்கர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே போலீசார், பூஜாவின் தாயார் மனோரமா கேட்கரை கைது செய்துள்ளனர்.