புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் தாக்கல் அண்மையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கிய நிலையில், கருப்பு சட்டையில் வந்திருந்த திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ''புதுச்சேரியை பொறுத்தவரை எல்லாமே சரியாக நடந்து கொண்டிருக்கிறது. என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்பவர்களுக்கு கரோனா நேரத்தில் இந்த மாநிலத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இரவு பகலாக பணியாற்றினேன் என்று தெரியும். சில நேரங்களில் சில நிர்வாக ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் வரலாம்.
நாம் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஜி.எஸ்.டி உள்ளிட்ட சில கொள்கை முடிவுகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இவை எல்லாவற்றையுமே அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில மக்களுக்கு ஒரே ஒரு உறுதியை மட்டும் சொல்கிறேன். என்னை பொருத்தமட்டில் இந்த அரசாங்கம் மக்களுக்கு என்னென்ன நல்லவை செய்கிறதோ அது அனைத்திற்கும் நான் உறுதுணையாக இருப்பேன். வெள்ள நிவாரண நிதியாக இருக்கட்டும், நாகையில் திடீரென வெள்ளம் வந்துள்ளது அதற்கான நிவாரணத் தொகையாக இருக்கட்டும், முதியோர் பென்ஷனாக இருக்கட்டும். மக்களுக்கு என்ன திட்டமோ அதை உடனே நிறைவேற்ற அதற்கு கையெழுத்திடுவது, அதற்கு நிதி நிலைமையை சரியில்லை என்றால் நிதித்துறை அதிகாரியை கூப்பிட்டு, தலைமை அதிகாரியை கூப்பிட்டு இதை எப்படி உடனே சரி செய்யலாம் என்பது போன்ற பணியை தான் ஆற்றிக் கொண்டிருக்கிறேனே தவிர, எனது மனசாட்சிப்படி இவர்கள் எல்லாம் சொல்கின்ற அளவுக்கு எந்த விதத்திலும் மெத்தனமாக இல்லை'' என்றார்.