இயலாத முதியவர்கள், வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளவர்கள், அதைவிட வறுமைக் கோட்டிற்கும் மிகவும் கீழாக உள்ளவர்கள் சமூகத்தில் முடியாதவர்கள் எனப் பல தரப்பட்ட மக்களின் நலன் பொருட்டு கேரள முதல்வரான பினராயி விஜயன் ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்திய ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்ற திட்டம் கேரள மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. மக்கள் அத்திட்டத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வேளை உணவு கூட முழுமையாகக் கிடைக்காமல் பசியில் உழல்பவர்கள்; தேவையைக் கேட்பதற்குக் கூட சக்தியற்று மூலையில் முடங்கிப் போன முதியவர்கள்; பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு முதிர்வு காலத்தில் வீட்டுத் திண்ணையில் கிடத்தப்பட்டவர்கள்; ஆதாருக்கும் ரேசன் அட்டைக்கும் அலைந்து ஓய்ந்து போனவர்கள்; விளிம்பு நிலை மக்களின் பரிதாபச் சூழல் என்று மாநிலத்தின் மூலை முடுக்குகளில் முனங்குபவர்கள் குரல்கள் முதல்வர் பினராயி விஜயன் வரை போயிருக்கிறது. அதையடுத்தே அதிகாரிகள் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து அந்த மக்களுக்கான புனர்ஜென்ம திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதற்கு முன்னதாக இது போன்ற அனைத்து விபரங்களையும் துல்லியமாக கணக்கிடுவதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் சந்து, பொந்துகளைக் கூட விடாமல் அரசு அலுவலர்கள் ஏறி இறங்கியிருக்கிறார்கள்.
இப்பணிக்காக கேரளாவின் ஊராட்சிப் பகுதிகள் என்றால் அதன் தலைவர், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி எனில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி மாநகராட்சி எனில் அதன் உள்ளாட்சி அமைப்பான அனைத்து வார்டுகளின் உறுப்பினர்கள் என்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் அந்தந்தப் பகுதியின் அங்கன்வாடிப் பணியாளர்களும் இணைந்து அனைத்து வார்டுகளடங்கிய வீடுகளிலுள்ளவர்களின் தன்மை பற்றிய புள்ளி விபரக் கணக்கினை சேகரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் கணக்கெடுப்பில் ஒரு குடும்பத்தில் இயலாத முதியவர்கள்; பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள்; நடக்க இயலாதவர்கள்; மாற்றுத்திறனாளிகள்; வருமானமில்லாதவர்; கண் பார்வை அற்றோர்; அன்றாட உணவு கூட கிடைக்காமல் தவிப்பவர்கள்; முதியவர்கள்; ரேசன் மற்றும் ஆதார் அட்டை இல்லாதோர்; வீட்டிற்கு மின்வசதி கிடைக்காமல் தவிப்போர்; விபத்தில் சிக்கி முடங்கியவர்கள்; தனக்கான ரேசன் பொருட்களைக் கூட வாங்குவதற்கு ரேசன் கடைக்குச் செல்லமுடியாத சீனியர் சிட்டிசன்கள் என்று அவர்களின் பெயர்கள், மொபைல் எண்கள் கேரளா முழுக்க உள்ளாட்சி அமைப்பினர் மூலம் கணக்கெடுக்கப்பட்டதில் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளவர்கள், அதற்கும் கீழே உள்ள எம்.பி.எல். நிலையில் உள்ளவர்களின் பட்டியலும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்த கணக்கெடுப்பிற்குப் பின்பு ஆதார், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு அவை கிடைக்க ஏற்பாடு செய்ததுடன் மின் இணைப்பு கிடைக்காதவர்களுக்கு உடனடியான மின் இணைப்பும் செய்து தரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கேரள மாநிலம் முழுக்க சுமார் 5000 பேர் போதிய உணவு கிடைக்காமல் தவிப்பவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக இப்படித் தவிப்பவர்கள் கொல்லம் மாவட்டத்தில் மட்டும் 200 பேர் என்கிறார் வருவாய்த்துறையின் அதிகாரி ஒருவர்.
கணக்கீட்டின்படி, உணவின்றி தவிக்கும் முதியவர்களின் முகவரிகள் அவர்களிருக்கும் வார்டுகளின் கவுன்சிலர்களிடம் தரப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலை அரசு அமைத்துள்ள அந்தந்தப் பகுதியின் மலிவு விலை உணவகத்தின் ஊழியர்களிடம் வார்டு கவுன்சிலர்கள் கொடுத்து விடுவார்கள். உணவகப் பணியாளர்கள் அந்தப் பட்டியலின்படி குறிப்பிடப்பட்டிருக்கும் முதியவர்களின் வீடு தேடிச் சென்று காலை, மதியம், இரவு என அன்றாடம் மூன்று வேளைகளிலும் உணவுகளை இலவசமாகவே வழங்கி விடுவர். இதற்கான பணிக்காக உணவக ஊழியர்களுக்கு தினசரி 500 ஊதியமாக அரசால் வழங்கப்படுகிறது. குறிப்பிட்டவர்கள் அனைவருக்கும் உணவு தாமதமின்றி சென்றடைகிறதா என கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு திட்டம் சிந்தாமல் சிதறாமல் நடந்து வருகிறது. காலையில் இட்லி, தோசை, மதியம் சாப்பாடு, இரவு தோசை, சப்பாத்தி என மாநிலம் முழுக்க தற்போது செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்.
இது ஒரு பக்கமெனில் அடுத்தாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள் திட்டம் தான் புதியது. ஒரு ரேசன் கடையை எடுத்துக் கொண்டால் அந்தக் கடைக்கு நடந்து வந்து மணிக்கணக்கில் கால்கடுக்க வரிசையில் நின்று தங்களுக்கான ரேசன் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் முதியவர்கள், முடங்கியவர்கள் என்று விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தானிருப்பர். குறிப்பாக ஒவ்வொரு ரேசன் கடைகளின் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் இருப்பது வழக்கம். அதில் ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு., ஐ.என்டி.யு.சி., முஸ்லிம் அமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் யூனியன்களைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்களிருப்பார்கள். அவர்களிடம் அந்த ரேசன் கடைப் பகுதியின் வாங்க முடியாதவர்கள் பற்றிய முகவரிப் பட்டியலும் அவர்களுக்கான ரேசன் பொருட்களும் தரப்படும் அதன்படி அந்த ஆட்டோ டிரைவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று ரேசன் பொருட்களை டெலிவரி செய்துவிடுவார்கள்.
இந்தப் பணியில் ஒரே ஆட்டோ டிரைவர் மட்டுமல்ல, அந்த ஸ்டாண்டின் அனைத்து ஆட்டோ டிரைவர்களும் தங்களுக்குள், பட்டியலில் உள்ளவர்களைப் பங்கீடு செய்து கொண்டு டெலிவரி செய்கிறார்கள். மாநிலம் முழுக்க நடக்கும் இப்படி வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள் சப்ளையை அனைத்து ஆட்டோ டிரைவர்களும் மனம் ஒத்த நிலையில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி தன்னார்வத் தொண்டாகவே செய்கிறார்கள். இந்த முறையில் இயலாதவர்கள் அனைவருக்கும் மாதத்தின் 10 ஆம் தேதிக்குள்ளாக ரேசன் பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு விடுகிறது. இதற்காக அரசுக்குப் பத்து பைசா செலவு கிடையாது என்கிறார்கள். இத்திட்டத்திற்காக முதல்வர் பினராயி விஜயன் முன்னதாகவே மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள், யூனியன் தலைவர்கள், ஆட்டோ டிரைவர்களின் பிரதிநிதிகளடங்கிய கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் இந்த இயலாதோர் ரேசன் திட்டம் பற்றியும், அதை டெலிவரி செய்கிற முறை பற்றியும் அவர்களிடம் விரிவாகக் கலந்தாய்வு செய்தார். அவர்களும் சமூக தொண்டூழியம் என்ற வகையில் மனமுவந்து இதனை ஏற்றுக் கொண்டனர். அதன்படி ஆட்டோ டிரைவர்கள் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
தடையின்றி நடந்து வருகிற இத்திட்டங்களுக்கு ‘ஒப்பம்’ என்று பெயரிட்டிருக்கிறார் பினராயி விஜயன். மலையாளத்தில் ‘ஒப்பம்’ என்பதின் தமிழாக்கம், “நான் உங்களுடன் இருக்கிறேன்” என்பது பொருள். இதுகுறித்து கொல்லம் ஆட்டோ டிரைவர் சித்தார்த் சொல்லுவது, “எங்ககிட்ட இந்த காரியம் பத்தி அவங்க பேசுனப்ப எங்களால இது செய்ய முடியும்னு தோனுச்சு. எங்களப் பொறுத்தவரை இத ஒரு வேலைன்னு நெனைக்கல. அத எங்க வீட்டுக்குச் செய்யற கடமையா நாங்க நெனைக்கிறோம். எங்க ஃபேமிலில ஒருத்தர்னு நெனைச்சு செய்யுறோம்” என்றார் திறந்த மனதோடு. இதுகுறித்து ஆரியங்காவிலுள்ள ஐயப்பன்குட்டி கூறுகையில், “குடும்பத்தில வயசான பெரியவங்க, முடியாம ஒதுக்கப்பட்ட மக்கள் அடுத்த வேளை உணவு கெடைக்குமான்னு திண்டாட்டத்தில ஆதரவில்லாமப் போயிட்டோமேன்னு நெனைக்குறப்ப, அவங்களத் தேடிப் போயி இலவச உணவு, முடியாதவங்களோட ரேசன் பொருள வீட்டுக்கு கொண்டு போயிக் குடுக்குறது பினராயி மக்களுக்குச் செய்யுற உதவி. நாம ஆதரவில்லாதவங்கயில்ல. நமக்கு ஆதரவா அரசாங்கம் நம்மளோட இருக்குன்னு அந்த மக்கள் நம்பும்படியா பண்ணிட்டார்” என்றார்.
இங்கே யாரும் அனாதைகளல்ல. ஆதரவற்றவர்களல்ல என்ற நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறார் பினராயி விஜயன்.