நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அசாம், பீகார், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கோடி மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 160- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வர்த்தக நகரமான மும்பை முடங்கியது. அதே போல் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூரில் பலத்த மழை பெய்தது. அந்த மாநிலத்தில் உள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கண்ட 5 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மழை வெள்ள நிவாரண நிதிக்கு தங்களது ஒரு மாத ஊதியத்தினை வழங்குவது என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மாநில அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதல்வர் தேவேந்திர பட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலும், சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூபாய் 6,813 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.