
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்றது. அதே சமயம் இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற்றது. அந்த வகையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி துபாயில் கடந்த 9ஆம் தேதி (09.03.2025) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களை குவித்தது.
இந்திய அணியில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணிக்கு 252 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி 252 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இத்தகைய சூழலில் தான் 49 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களை எடுத்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியது.
அதே சமயம் தொடர் ஆட்டநாயகன் விருதை நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்தராவுக்கும், ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் வழங்கப்பட்டன. இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது. இந்த ரொக்கப் பரிசானது இந்திய அணி வீரர்கள்,பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக் குழுவினருக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.