Skip to main content

'தன்னுடைய மாணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லையே?'-ரணமாக்கிய வைரல் வீடியோ 

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
'How many of his students are alive?'-viral video

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் கடந்த ஜூலை 30 தேதி (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்  முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் நான்காவது நாளாக இன்றும் (02.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 316ஆக உயர்ந்துள்ளது. மேலும் முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேப்பாடி ஆகிய இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதே சமயம் முண்டக்கை பகுதியில் அமைக்கப்பட்ட இரும்பு பாலம் வழியாக பல்வேறு உபகரணங்கள் கொண்டு சென்று மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தான் நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேறு மற்றும் சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் தெர்மல் ஸ்கேனர் கருவி காட்டிக் கொடுக்கும். காணாமல் போனவர்களையும், மண்ணில் புதையுண்டவர்களையும் கண்டறிய ஏற்கனவே மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முண்டகை பகுதியில் அமைந்திருந்த அரசு துவக்கப் பள்ளி முழுவதுமாக சேதமடைந்து அடையாளம் தெரியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சாந்தி என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் பயிலும் மாணவர்களுடன் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு 'தன்னிடம் படித்த மாணவர்களில் எத்தனை பேர் உயிர் உள்ளார்கள் என்று தெரியவில்லையே' என அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வயநாடு மீட்புப் பணிகளில் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்கள், பள்ளி புத்தகப் பைகள், வண்ண குப்பிகள் என கைப்பற்றப்பட்டு வருவது தொடர்பான காட்சிகளும் இணையங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்