விடுதி வளாகத்தில் கிடந்த சானிட்டரி நாப்கினால் ஆத்திரமடைந்த விடுதி காப்பாளர், மாணவிகளை நிர்வாணப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சானிட்டரி நாப்கின்கள் மீதான விழிப்புணர்வு நாடு முழுவதும் ஏற்படுத்தப்படுகிறது. அதுகுறித்து ஒரு படமே வெளிவந்து அனைவரிடமும் நல்லாதரவைப் பெற்றது. மாதவிடாய் இழிவானது அல்ல, இயல்பானது என பலரும் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில்தான், மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள டாக்டர் ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகத்தில், மேற்சொன்ன மாற்றங்களுக்கு எதிரான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தப் பல்கலைக் கழகத்தின் விடுதிகளில் ஒன்றான ராணி லட்சுமி பாய் விடுதி வளாகத்தில், கடந்த ஞாயிறு இரவு பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின் கிடப்பதை காப்பாளராக இருக்கும் சந்தா சென் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். இதை யார் பொதுவெளியில் போட்டது என மாணவிகளைக் கேள்வியெழுப்பிய அவர், 40க்கும் மேற்பட்ட மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனால், கோபமடைந்த மாணவிகள் கல்லூரி துணைவேந்தரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் வாக்குறுதி அளித்த நிலையில், மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.