கேரளாவில் இருவருக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.
நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிஃபா வைரஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஐ.சி.எம்.ஆர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை போலவே கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் எனவும், முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிஃபா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதால் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என ஐ.சி.எம்.ஆர் தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளளார்.
தற்போது, உறுதிசெய்யப்பட்ட நிஃபா நோயாளிகளின் தொடர்பு பட்டியலில் 1080 பேர் உள்ளனர். மேலும், இன்று 130 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், கோழிக்கோடு மாவட்டத்தைத் தவிர தொடர்பு பட்டியலில் 29 பேர் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து தொடர்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிஃபா வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால் கேரள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மத்திய குழு அம்மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நிஃபா வைரஸ் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் மையங்கள் ஆகிய அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளுக்கு தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.