பேரிடர் நேரத்தில் நிவாரண உதவி வழங்கிய தமிழக முதல்வருக்கு இமாச்சலப் பிரதேச முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக வரலாறு காணாத பலத்த மழை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு என பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த நிலச்சரிவு, பலத்த மழை, வெள்ளம் ஆகிய காரணங்களால் ஏராளமான பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொதுச் சொத்துக்களும் தனியார் சொத்துக்களும் பெருத்த சேதமடைந்தன.
அதே சமயம் இடைவிடாத மழை, மேக வெடிப்பு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் பேரழிவை சந்தித்துள்ளது, மறுபுறம் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமாகிவிட்டதாக தெரிவித்துள்ள அம்மாநில அரசு, மழை வெள்ள பாதிப்புகளால் பயிர்களும், விவசாய நிலங்களும் அழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதி உதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கடிதம் எழுதியுள்ளார்.