
இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார். இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் இரண்டு முறை இவர் பதக்கம் வென்று கொடுத்துள்ளார். இவருக்கும், மற்றொரு மல்யுத்த வீரரான சாகர் ரண தன்கட்டுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இத்தொடர்ச்சியாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு சாகர் ரண தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் சத்ராஸல் அரங்கில் மோதல் வெடித்தது.
இதில் சுஷில் குமார் தரப்பு, சாகர் ரண தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. சுஷில் குமார் தரப்பு தாக்கியதில் படுகாயமடைந்த சாகர் ரண தன்கட், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பின் சுஷில் குமாரை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே வடக்கு மண்டல பரிவில் மேலாளராக பணியாற்றிய அவரை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.