ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு எளிய கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சனா நாக். இவருக்கு 26 வயதாகிறது. குடும்ப வறுமை காரணமாக, கடந்த 2018 ஆம் ஆண்டில், தனது தாயுடன் புவனேஷ்வருக்கு குடியேறிய அர்ச்சனா, வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்ப செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பியூட்டி பார்லர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, ஜெகபந்த் என்பவருடன் அர்ச்சனாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு, காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பழைய கார்களை விற்கும் தொழிலை செய்து வருகிறார். இதனால், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அர்ச்சனா, வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலமானவர்களுடன் நெருக்கமாகப் பழகிவந்துள்ளார். மேலும், அவர்களுடன் சில இளம் பெண்களையும் பழக வைத்துள்ளார். அப்போது, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் முக்கிய புள்ளிகளின் புகைப்படங்களை ரகசியமாகப் படம் பிடித்த அர்ச்சனா, அதை வைத்து, மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். இப்படி 30க்கும் மேற்பட்டவர்களைப் படம் பிடித்து மிரட்டிய அர்ச்சனா மற்றும் ஜெகபந்த் தம்பதியினர் 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.30 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அடிக்கடி சர்ச்சைகளும், புகார்களும் எழுந்தாலும் அர்ச்சனாவின் பண பலத்தால், அவை வந்த வேகத்தில் மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான், திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அர்ச்சனா மீது மோசடி புகார் அளித்திருந்தார். அவரை தொடர்ந்து, தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாக, இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பிறகுதான் இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது
அந்தரங்க வீடியோக்களை வைத்து பலரிடமும் பணம் பறித்துவந்த அர்ச்சனாவுக்கு அவரது கணவர் ஜெகபந்த் உடந்தையாக இருந்தது போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அர்ச்சனாவையும் ஜெகபந்த்தையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த மோசடி தம்பதியினரின் வீட்டில் இருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை போலீசார் ஆய்வு செய்தபோது ஒடிசா மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்பட 25 க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், இந்த மோசடி வலையில் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.