Skip to main content

”மாட்டுக்கறி சாப்பிட மாட்டோம் என்று சொன்னால் உதவுங்கள்”- இந்து மகாசபா தலைவர்

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
hindu

 

கேரள மக்கள் மாட்டுக்கறி உண்பதால்தான் இயற்கை அவர்களைத் தண்டிக்க வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று இந்து மகாசபா தலைவரான சாமியார் சக்ரபாணி மகராஜ் கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். இவ்வாறு அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றிற்கு பதில் அளித்தார். 

 

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ வேண்டியதுதான். ஆனால், இயற்கையையும் உயிரினங்களையும் மதிப்பவர்களுக்கு உதவ வேண்டும். கேரள மக்களுக்கு ரொட்டி கிடைத்தால் அதற்கு தொட்டுக்குள்ள பசு மாட்டைக் கொன்று அதன் இறைச்சியை சாப்பிடுகின்றனர். அதனால், மாட்டுக்கறியை சாப்பிடாதவர்களுக்கு மட்டும் இந்துக்கள் உதவ வேண்டும். மாட்டுக்கறி சாப்பிடுபவர்களுக்கு உதவுவதாக இருந்தால் எதிர்காலத்தில் மாட்டுக்கறி சாப்பிட மாட்டோம்  என்று அவர்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு உதவ வேண்டும். இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல் பசுவைக் கொன்று அதன் இறைச்சியை சாப்பிடுபவர்களை மன்னிக்கவே கூடாது என்று மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.    
 

சார்ந்த செய்திகள்

Next Story

"இந்துக்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் இடையே போர் நடக்கிறது" - அமேதியில் பாத யாத்திரை நடத்திய ராகுல் காந்தி!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

rahul gandhi

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால், இந்தத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டுவருகின்றனர்.

 

இந்நிலையில், ராகுல் காந்தி இன்று (18.12.2021) உத்தரப்பிரதேசத்தின் அமேதியில், 6 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாத யாத்திரை நடத்தினார். இந்தப் பாத யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தியும் உடனிருந்தார். அதனைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இந்துக்களும், இந்துத்துவவாதிகளுக்கும் இடையே போர் நடப்பதாகக் கூறியுள்ளார்.

 

அமேதியில் ராகுல் காந்தி பேசியதாவது, “அமேதியில் உள்ள ஒவ்வொரு பாதையும் இன்னும் அப்படியே உள்ளது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் மக்களின் கண்களில் அரசின் மீதான கோபம் உள்ளது. அநீதிக்கு எதிராக நாம் இன்னும் ஒன்றுபட்டுத்தான் உள்ளோம். நான் 2004இல் அரசியலுக்கு வந்தேன். அமேதியில்தான் நான் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டேன். அமேதி மக்கள், அரசியல் பற்றி எனக்கு நிறைய கற்று தந்துள்ளனர். அரசியலில் நீங்கள் எனக்கு வழிகாட்டியுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

 

ஒரு இந்து தன் வாழ்நாள் முழுவதையும் உண்மையின் பாதையில் நடத்துகிறான். ஒரு இந்து தனது பயத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டான். அவன் எல்லா அச்சங்களையும் எதிர்கொள்கிறான். அவர் தனது பயத்தை ஒருபோதும் கோபமாக, வெறுப்பாக மாற விடமாட்டார். ஆனால் ஒரு இந்துத்துவவாதி ஆட்சியில் இருக்க பொய்களை மட்டுமே பயன்படுத்துகிறார். ஒரு இந்துவின் பாதை சத்தியாகிரகம் என்று மகாத்மா காந்தி கூறினார். இன்று இந்துக்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் இடையே போர் நடந்துவருகிறது. இந்துக்கள் சத்தியாக்கிரகத்தை நம்பினால், இந்துத்துவவாதிகள் சட்டாகிரகத்தை (அரசியல் பேராசை) நம்புகிறார்கள். இன்று நம் நாட்டில் பணவீக்கம், வலி, சோகம் ஆகியவை இருக்கிறதென்றால் அது இந்துத்துவவாதிகளின் வேலை. இன்றைய நிலையை நீங்கள் அறிவீர்கள். வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் என்பது முதலமைச்சரோ, பிரதமரோ பதிலளிக்கமால் இருக்கப்போகும் மிகப்பெரிய கேள்விகள். பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் கங்கையில் நீராடினார். ஆனால் அவர் வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசமாட்டார்.

 

இளைஞர்கள் ஏன் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இது பெரிய அளவிலான வேலையின்மையை ஏற்படுத்தியது. பணமதிப்பு நீக்கம், தவறாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, கரோனா நெருக்கடியின்போது எந்த உதவியும் அளிக்காதது இந்தியாவில் வேலையின்மைக்கு முக்கிய காரணங்கள். இன்று லடாக்கில் இந்தியாவின் நிலத்தை சீனா பறித்து அதை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. ஆனால், பிரதமர் எதுவும் கூறவில்லை. நிலம் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று பிரதமர் கூறுகிறார். சிறிது நேரம் கழித்து, நிலம் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

சாவர்க்கரை மன்னிப்பு கேட்க சொன்னது மகாத்மா காந்திதான் - மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

rajnath sing savarkar

 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று (12.10.2021) சாவர்க்கர் பற்றிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், சாவர்க்கரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்கச் சொன்னதே மகாத்மா காந்திதான் என தெரிவித்துள்ளார்.

 

புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங் பேசியதாவது,

 

“சாவர்க்கர் இந்திய வரலாற்றின் அடையாளமாக இருந்தார். தொடர்ந்து அடையாளமாக இருப்பார். அவரைப் பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவரை தாழ்ந்தவராக பார்ப்பது ஏற்புடையதும் நியாயமானதும் அல்ல. அவர் சுதந்திர போராட்ட வீரர், மேலும் தீவிர தேசியவாதி. ஆனால் மார்க்சிஸ்ட் மற்றும் லெனினிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் மக்கள் சாவர்க்கர் ஒரு ஃபாசிஸ்ட் என்று குற்றம் சாட்டுகிறார்கள். சாவர்க்கர் மீதான வெறுப்பு நியாயமற்றது.

 

udanpirape

 

சாவர்க்கரைப் பற்றிய பொய்கள் மீண்டும் மீண்டும் பரப்பப்படுகின்றன. சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் பல கருணை மனுக்களைத் தாக்கல் செய்தார் என்று  பரப்பப்படுகிறது. மகாத்மா காந்திதான் அவரை கருணை மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு கூறினார். சாவர்க்கர் 20ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் முதல் இராணுவ மூலோபாய விவகார நிபுணர் ஆவார். அவர் நாட்டிற்கு வலுவான பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர கோட்பாட்டை வழங்கினார். அவருக்கு இந்து என்பது எந்த மதத்துடனும் தொடர்புடையது அல்ல. அது அவருக்குப் புவியியல் மற்றும் அரசியல் அடையாளத்துடன் தொடர்புடையது. சாவர்க்கருக்கு இந்துத்துவா என்பது கலாச்சார தேசியத்துடன் தொடர்புடையது.

 

சாவர்க்கரை பொறுத்தவரை, தனது குடிமக்களை அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்காததே சிறந்த அரசாகும். எனவே அவரது இந்துத்துவாவை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.”


இவ்வாறு ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.