உத்தரபிரதேசத்தில் அப்துல் பாசித் என்பவர் வீட்டுக்கு 23 கோடி ரூபாய் கரண்ட் பில் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 23 கோடி ரூபாய் பில் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக மின் வாரியத்திற்கு புகார் தந்துள்ளார். கன்னூஜ் பகுதியில் உள்ள இவரது வீட்டிற்கு 2 கிலோவாட்ஸ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் கடந்த மாதத்தில் 178 யூனிட்டுகள் ஓடியுள்ளதாக மின்சார வாரியத்தின் ரீடிங் காண்பித்தது. ஆனால் அந்த 178 யூனிட்டுக்கு 23 கோடியே 67 லட்சத்து 71 ஆயிரத்து 524 ரூபாயைக் கட்டணமாக கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மின்வாரிய துறை அதிகாரி கூறுகையில், 'ரீடிங் மீட்டரில் ஏதாவது தவறு நடந்திருக்கும். அந்த கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்சாரத்தின் அளவு கணக்கிடப்படும் எனவும் அதுவரை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது' என கூறினார். மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கூறுகையில், ஒட்டுமொத்த மாநில கரண்ட் பில்லையும் எனக்கு அனுப்பிவிட்டனர் போல. இந்த தொகையை வாழ்நாள் முழுவதும் உழைத்தால் கூட என்னால் கட்ட முடியாது என கூறியுள்ளார்.