Skip to main content

புதுச்சேரியில் மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!  

Published on 21/02/2021 | Edited on 21/02/2021

 

PUDUCHERRY CONGRESS GOVERNMENT, CONGRESS AND DMK MLAS RESIGN

புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என நான்கு பேர் தங்களது அமைச்சர் பதவி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்தது. அதேபோல் காங்கிரஸ் கூட்டணியில்  இடம்பெற்றுள்ள தி.மு.க.வில் 3 சட்டமன்ற உறுப்பினர்களும், ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என காங்கிரஸ் கூட்டணியில் மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். 

 

இதேபோன்று எதிரணியிலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 உறுப்பினர்கள் , 3 நியமன உறுப்பினர்கள் (பா.ஜ.க)  என மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதையடுத்து, அம்மாநில எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் பெரும்பான்மையை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநருக்கு கடிதம் அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாளை (22/02/2021) மாலை 05.00 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து நாளை (22/02/2020) காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவின் உத்தரவின் பேரில் சட்டப்பேரவைச்  செயலாளர் முனுசாமி அறிவித்திருந்தார். 

PUDUCHERRY CONGRESS GOVERNMENT, CONGRESS AND DMK MLAS RESIGN

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (21/02/2021) ராஜ்பவன் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார். இதேபோல், தி.மு.க.வைச் சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். 

 

ஏற்கனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்த நிலையில், மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதால், சட்டப்பேரவையின் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 குறைந்துள்ளது. இதனால் நாளை (22/02/2021) கூட்டப்படும் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்