தபால் துறையிலிருந்து கடந்த 8 ஆண்டுகளாக எங்கள் ஊருக்கு வந்த கடிதம் எதுவுமே விநியோகிக்கப்படவில்லை என ஒரு கிராமமே ஆதார் அட்டைகளை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை கிளம்பியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கவுரிபுரா என்ற குக்கிராமத்தில் உள்ள அஞ்சலகத்தில் சாகிப் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தபால்காரராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு வரும் கடிதத்தை சாகிப் விநியோகிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கிராம மக்களுக்கான ஆதார் அட்டைகள், அரசு பணி நியமன ஆணைகள் உள்ளிட்ட முக்கிய தபால்களை ஒரு இடத்தில் ஒன்றாக மூட்டையில் போட்டு கட்டி வைத்துள்ளார் சாகிப். இதனைக் கண்டறிந்த சிறுவர்கள் சிலர் இதனை பெரியவர்களிடம் கூற, அங்கு சென்ற பொதுமக்கள் மூட்டையிலிருந்த ஆதார், பான், அரசு பணி நியமன ஆணைகள் கட்டுக்கட்டாக இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர். ஒரு தபால்காரரின் அலட்சியத்தால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அரசின் பலன்கள் கிடைக்காமல் போய்விட்டது என்று வேதனை தெரிவித்த கவுரிபுரா கிராம மக்கள் அதிருப்தியில் அவற்றை குப்பையில் எறிந்து விட்டு சென்றனர்.