Skip to main content

குஜராத் முதல்வரை கலங்கவைத்த நிலக்கடலை ஊழல்!

Published on 16/08/2018 | Edited on 16/08/2018

குஜராத்தில் விவசாயிகளிடமிருந்து நிலக்கடலையை வாங்கி இருப்புவைத்ததில் ஊழல் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் காவல்துறை இதுவரை 30 நபர்களைக் கைதுசெய்துள்ளது. இதில் பா.ஜ. பிரமுகர்களும் கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்களும் அடக்கமென தெரியவந்துள்ளது.

Nut

 

 

குஜராத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலைதந்து விவசாயிகளிடமிருந்து ரூ 4000 கோடி அளவுக்கு நிலக்கடலை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில்தான் நிதி முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தரம்குறைந்த நிலக்கடலை கொள்முதல், கொள்முதல் செய்த நிலக்கடலையில் மணல், சேறு, கற்களைக் கலப்படம் செய்தல், கலப்படம் செய்தது வெளிப்படாமலிருக்க, அவை இருப்பு வைக்கப்பட்டுள்ள கிட்டங்கிகளுக்குத் தீவைப்பது என பல்வேறு உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.

 

 

கடந்த சில மாதங்களில் மட்டும், நிலக்கடலை இருப்பு வைக்கப்பட்ட வெவ்வேறு இடங்களில் நான்கு தீவிபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகள், நிலக்கடலையில் செய்த கலப்படம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவ்விபத்துகளில் கிட்டத்தட்ட 51 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கடலை மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

ராஜ்கோட் மாவட்டம் பேதா கிராமத்தைச் சேர்ந்த தனியார் சேமிப்புக் கிடங்கொன்றில் இருப்புவைக்கப்பட்டிருந்த நிலக்கடலை மூட்டைகளில் அளவுக்கதிகமாக மணலும் சிறு கற்களும் இருந்ததை அறியவந்த, அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது இந்த ஊழல் வெளிப்பட்டிருக்கிறது.

 

 

கிட்டத்தட்ட ஒவ்வொரு மூடையிலும் 10 கிலோ நிலக்கடலையைப் பிரித்தெடுத்துவிட்டு, அதற்குப்பதில் அதேயளவு மணல் அல்லது கற்களை கலப்படம் செய்திருக்கிறார்கள். பிரித்தெடுத்த கடலையை தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்றிருக்கிறார்கள் என ஊழல் நடந்த விதம் குறித்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஊழலில் குஜராத்தின் முன்னாள் விவசாயத் துறை அமைச்சர் சிமான் சபாரியா சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதேசமயம் அடிப்படை கட்சி ஊழியர்களும், கீழ்நிலை கூட்டுறவுத் துறை ஊழியர்களும் சம்பந்தப்படுத்தப்பட்டு பெருந்தலைகள் தப்பிக்க வைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. நிலக்கடலை ஊழல் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியைக் கவலையடையச் செய்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்