2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் 'இது கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட்' என்று கடுமையாக விமர்சித்துள்ளன.
பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி, மக்களின் கைகளில் பணத்தை அளிப்பதை மறந்துவிட்டு, இந்தியாவின் சொத்துகளை பெருமுதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது என விமர்சித்துள்ளார்.
இது ஒரு விவசாயிகள் விரோத, மக்கள் விரோத, நாட்டிற்கு விரோதமான பட்ஜெட். அவர்கள் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் காப்பீடு நிறுவனங்கள் வரை அனைத்தையும் விற்கிறார்கள். இது மக்களை ஏமாற்றுவதற்கான பட்ஜெட் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்காக அல்ல, அதன் விற்பனைக்கு. இதற்கு முன்பு அவர்கள் ரயில்வே, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் மற்றும் பிறவற்றை விற்றனர். இந்த பட்ஜெட்டில் எரிவாயுக் குழாய், அரங்குகள், சாலைகள் மற்றும் கிடங்குகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜாஷ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தினர், கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், வெற்றுக் கூற்றுக்கள் ஆகியவற்றால் சோர்வடைந்துள்ளனர் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
இந்த பட்ஜெட் கார்ப்பரேட் குழுக்களுக்கு நேரடியாக, மறைமுகமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; இது விவசாயிகள், சாமானியர்களின் பிரச்சினைகளை அதிகரிக்கும் என சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது.