2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.
மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும், இன்னும் இந்த சட்டத்திற்கான விதிகள் உருவாக்கப்படவில்லை.
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை வகுக்க மேலும் அவகாசம் கோரியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், "குடியுரிமை (திருத்த) சட்டம் 2019, 12.12.2019 அன்று அறிவிக்கப்பட்டு 10.1.2020 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகளை வகுக்க 9.1.2022 வரை அவகாசம் வழங்க சட்ட விதிகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.