Skip to main content

திருப்பித் தாக்கும் ராகுலின் சர்வாதிகாரி ட்வீட்..!  அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்..!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

rahul gandhi tweet about narendra modi

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களாக டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம், மத்திய மோடி அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறைகள் வெடித்தன. இதுகுறித்து ‘பிரதமர் மோடி அலட்சியமாக இருக்கிறார்; போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அக்கறை காட்டவில்லை; போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறார்’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

 

போராட்டங்களை மையப்படுத்தி ராகுல் காந்தியும் பிரதமர் மோடியை தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வருகிறார். போராடும் விவசாயிகள் டெல்லியில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக டெல்லி எல்லையில் அமைக்கப்படும் தற்காலிக தடுப்பு சுவர்கள் பற்றியும் விமர்சித்திருந்தார்.

 

இதனைக் கண்டிக்கும் விதமாக ட்வீட் செய்த ராகுல் காந்தி, உலகில் உள்ள சர்வாதிகாரிகளின் பெயர்கள் ‘எம்‘ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குகிறது என பதிவு செய்ததோடு, மார்கோஸ், முசோலினி, முஷாரப், முபாரக், மைக்கொம்பரோ, மிலோசெவிக், மொபட் என உலக சர்வாதிகாரிகள் பெயர்கள் சிலவற்றையும் சுட்டிக்காட்டியிருந்தார்.  

 

ராகுலின் இந்த ட்வீட் ஏகத்துக்கும் பரபரப்பானது. பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்குவதாகவே பொருள் கொள்ளப்பட்டன. பாஜக - காங்கிரஸ் தரப்பிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராகுலின் ட்வீட்டை வைத்தே நெட்டிசன்கள் திருப்பித் தாக்கி வருகிறார்கள்.

 

“சர்வாதிகாரிகளின் பெயர்கள் ‘எம்’ என்ற எழுத்தில்தான் துவங்குகிறது என்றால், மோதிலால் நேரு, மகாத்மா காந்தி, மன்மோகன் சிங், முலாயம் சிங், மம்தா பானர்ஜி ஆகியோரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாமா ராகுல் ஜி?” என்று பதிலடி தருகின்றனர்.

 

இது காங்கிரஸ் மேலிடத்தில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ராகுலின் ட்விட்டர் பதிவால், காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களும் விமர்சனத்துக்குள்ளாவதால், ராகுல் காந்தி மீது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

 

சார்ந்த செய்திகள்