பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துள்ளார்.
டெல்லிக்கு 3 நாள் பயணமாகச் சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், கரோனா சூழல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் நாளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், தமிழகத்தில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்கள் விடுதலை குறித்த தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்றம் இதற்குக் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. இதனால், நாளை தமிழக ஆளுநர், உள்துறை அமைச்சரையும், குடியரசுத் தலைவரையும் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
.