20 லட்சம் கோடியில் தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த சிறப்பு திட்டங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அவர் கூறுகையில்,
‘சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலதுறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைகள் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அறிவித்த விரிவான பொதுநோக்கு திட்டத்தின் பெயர் ''தன்னிறைவு இந்தியா''. இதில் 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் கவனம் செலுத்தப்படும்.
பொருளாதாரம், கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் ஆகியவை வளர்ச்சியின் தூண்கள். இவைகளை அடிப்படையாகக்கொண்டு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. நெருக்கடிகளில்தான் தேவைகளை பூர்த்தி செய்ய கற்றுக் கொள்கிறோம் என்றார்.
முதல் அறிவிப்பாக, நலிவடைந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் துறைக்கு பிணை இன்றி 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி திட்டம் அக்டோபர் 31-ம் தேதி வரை செயல்படுத்தப்படும். 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி திட்டத்தில் 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். 100 கோடி வியாபாரம் உள்ள சிறு தொழில்களுக்கு 25 கோடி கடன் இருந்தால் கூடுதல் கடன் தரப்படும். கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். முதல் ஓராண்டிற்கு கடன் தவணை வசூலிக்கப்பாடது. இந்த புதிய கடன் வசதியை பெற, சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் எதையும் தர தேவையில்லை என்றார்.
இரண்டாம் அறிவிப்பாக, 200 கோடிக்கும் குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது. சர்வதேச டெண்டர் கட்டுப்பாட்டால் உள்நாட்டு சிறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்றார்.
மூன்றாம் அறிவிப்பாக, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் மூன்று மாதங்களுக்கு பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும். அடுத்த ஆண்டில் பிஎஃப் தொகையை தொழிலாளர்கள், நிறுவனங்கள் 10% செலுத்தினால் போதும். பிஎஃப் சந்தா 12% என்ற நிலையில் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பிஎஃப் தொகையை அரசு ஏற்பதால் அடுத்த மூன்று மாதங்களில் 72 லட்சம் பேர் பயன் பெறுவர். ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் பிஎஃப் தொகையை அரசே செலுத்தி இருந்தது என்றார்.
நான்காம் அறிவிப்பாக, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களுக்கு 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாம் அறிவிப்பாக, மின்சார நிறுவனங்களுக்கு நிதி உதவி 90 ஆயிரம் கோடி.
ஆறாம் அறிவிப்பாக, கட்டுமானத்துறைக்கு சலுகைகளை அறிவித்தார். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவு காலம் ஆறு மாதமாக நீட்டிக்கப்படும். புதியதாக பதிவு செய்யப்படும் கட்டுமான திட்டங்களுக்கும் இந்த பதிவுகால நீட்டிப்பு பொருந்தும். வருமானவரி தாக்கல் கெடு தேதி 31 ஜூலையில் இருந்து 30 நவம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே பிடித்தம் செய்ய வேண்டிய வரி (டிடிஎஸ்) 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் பிடித்தம் 25% குறைப்பு மூலம் மக்களிடம் கூடுதலாக 50 ஆயிரம் கோடி பணம் புரள வாய்ப்புள்ளது. டிடிஎஸ் பிடித்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்றார்.