மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி டெல்லியில் இன்று (19.09.2023) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிடும்படி மத்திய அரசு கர்நாடகாவுக்கு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் நாங்கள் வலியுறுத்தினோம். அதே சமயம் கர்நாடக அரசுக்கு தண்ணீர் இருந்தும் திறந்துவிட மனமில்லை. காவிரி விவகாரத்தை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது; எனவே, மத்திய அரசு கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு மற்றும் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் (திமுக) ,எஸ்.ஜோதிமணி (காங்கிரஸ்), மு.தம்பிதுரை மற்றும் .என்.சந்திரசேகரன் (அதிமுக), கே.சுப்பராயன் (சிபிஐ), பி.ஆர்.நடராசன் (சிபிஎம்), வைகோ (மதிமுக), தொல். திருமாவளவன் (விசிக), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.வாசன் (தமாகா), கே.நவாஸ் கனி (இயூமுலீ), ஏ.கே.பி. சின்னராஜ் (கொமதேக), தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கே.எஸ்.விஜயன் மற்றும் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் உடன் இருந்தனர்.