கரோனா பாதித்தவர்கள் அனைவரும் குணமடைந்து கரோனா தொற்று இல்லாத மாநிலமாகத் திரிபுரா மாறியுள்ளது என அம்மாநில முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியா கரோனா வைரஸால் 23,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் இதன் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருகிறது. அந்த வகையில் கோவா மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து, கரோனா இல்லாத மாநிலமாக அம்மாநிலம் மாறியுள்ளது. அதேபோல தற்போது திரிபுரா மாநிலத்திலும் கரோனா பாதிப்பு பூஜ்ஜியமாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணமடைந்த வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து திரிபுரா கரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. திரிபுராவில் இரண்டு பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்ட சூழலில், அதில் ஒருவர் ஏற்கனவே குணமடைந்துவிட்டார். இந்நிலையில், இரண்டாவது நோயாளியும் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.