ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்த கூகுள் நிறுவனம், தற்போது ஏர்டெல் நிறுவனத்திலும் முதலீடு செய்யவுள்ளது. 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 7,400 கோடி) அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏர்டெல்- கூகுள் ஒப்பந்தப்படி, 700 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தின் 1.28 சதவீத பங்குகளை வாங்கவுள்ள கூகுள், மேலும் 300 மில்லியன் டாலர்களை சாத்தியமான பலவருட வர்த்தக ஒப்பந்தங்களில் முதலீடு செய்யவுள்ளது.
கூகுள் நிறுவனம் செய்யவுள்ள முதலீடு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஏர்டெல் நிறுவனம், தங்களது கூட்டாண்மை மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவது, 5ஜி சேவை ஆகியவற்றின் கவனம் செலுத்தும் எனவும், இந்தியா முழுவதும் வணிகங்களுக்கான கிளவுட் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவித்துள்ளது.