பெண்ணின் வீட்டுக்கு வந்த பார்சலில் அடையாளம் தெரியாத நபரின் உடல் இருந்த சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் யேண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாக துளசி. இவர் வீட்டுக்கு, நேற்று (19-12-24) இரவு பார்சல் ஒன்று வந்துள்ளது. அந்த பார்சலை உடைத்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபரின் உடல் இருந்துள்ளது. மேலும் அந்த பார்சல் உள்ளே ரூ.1.30 கோடி தரவேண்டும், தரமறுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை கடிதமும் இருந்தது. அதனை கண்ட அதிர்ச்சியடைந்த நாக துளசி, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நாக துளசியிடம் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், வீடு கட்டுவதற்கு ஷத்ரியா சேவா சமிதி என்ற அமைப்பிடம் நாக துளசி பண உதவி கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்த அந்த அமைப்பு, அவருக்கு டைல்ஸை அனுப்பியுள்ளது. இதையடுத்து, கட்டுமான பணிக்காக மீண்டும் அந்த அமைப்பிடம் நாக துளசி உதவி கேட்டுள்ளார்.
அதற்கு அந்த சமிதி அமைப்பு, மின்சாரப் பொருட்களை அனுப்பி வைப்பதாகக் கூறி அது சம்பந்தமான மெசேஜை வாட்ஸ் அப் மூலம் நாக துளசிக்கு அனுப்பியுள்ளது. இதையடுத்து, மின்சாரப் பொருட்கள் அனுப்பியதாக தெரிவித்து நாக துளசி வீட்டு முன்பு நபர் ஒருவர் பெட்டியை வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அந்த பெட்டியில் அடையாளம் தெரியாத நபரின் உடல் இருந்துள்ளது என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து அந்த ஷத்ரிய சேவா சமிதி அமைப்பிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்டியை வைத்து விட்டு சென்ற அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியே சுற்றியுள்ள காவல் நிலையத்தில் காணாமல் போன புகார்களை எல்லாம் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். பார்சலில் கிடந்த அந்த நபருக்கு 45 வயது இருக்கலாம் என்றும் அவர் கொலை செய்து 4, 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.