![n](http://image.nakkheeran.in/cdn/farfuture/dZDk6gKUmIN1AxSMlkjM-Bik0udxsr6C3pnttZo8J7Q/1542324614/sites/default/files/inline-images/narayanasamy1_0.jpg)
கஜா புயல் காரணமாக புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி காரைக்கால் மற்றும் கடலூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரைக்கு மக்கள் வரவேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சின்ன வாய்கால் மற்றும் ஜின்ஜர் ஒட்டல் அருகில் உள்ள வாய்க்கால்களை பார்வையிட்டார். கடற்கரை சென்றும் பார்வையிட்டார். பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தார்.
பேரிடர் மேலாண்மை துறையில் நேரிடையாக சென்று புயல் சம்பந்தமாக அனைத்து முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து அதிகாரிகளை விரைவாக பணிகள் செய்ய ஆலோசணை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,
" கஜா புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கம் காரைக்காலில் அதிகமாக இருக்கும் என்பதால் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரண நடவடிக்கைக்கு தயார் நிலையில் இருக்கின்றன.
இன்று இரவு 8 மணி முதல் புயல் காற்று வீசும், மழை பெய்யும் என்பதால் இரவு முழுவதும் அரசு இயந்திரம் இயங்கும். பொது மக்கள் வெளியே செல்ல வேண்டாம். பாதிப்பு என்றால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
புதுச்சேரியில் 16 குழுக்கள் கஜா புயலை எதிர் கொள்ள தயாராக உள்ளன. வயர்லெஸ் மற்றும் சாட்டிலைட் போன்கள் மூலம் தகவல்களை பரிமாற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது." என்றார்.