மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மக்களவை உறுப்பினரான நிதின் கட்கரியின் அலுவலகம் மகாராஸ்டிரா மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று இவரது அலுவலகத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், "ரூ.100 கோடி தர வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சர் நிதின் கட்கரியை கொலை செய்து விடுவேன்" என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து நிதின் கட்கரியின் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன் பின்னர் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அன்று அதே நபர் தொடர்பு கொண்டு ரூ. 10 கோடி தராவிட்டால் நிதின் கட்கரியை கொலை செய்து விடுவேன் என்று மற்றொரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நாக்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெலகாவி சிறையில் இருந்த மர்ம நபர் தான் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, நாக்பூர் காவல்துறையினர் பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ் பூஜாரியை கைது செய்து நாக்பூர் கொண்டு வந்தனர். இந்த கொலை மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஜெய்ஷ் பூஜாரி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில், பூஜாரிக்கும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதி அப்சர் பாஷாவுக்கு இடையே தொடர்பு இருப்பதை நாக்பூர் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திலும் அப்சர் பாஷாவுக்கு தொடர்பு இருந்துள்ளது. அதன் அடிப்படையில், அப்சர் பாஷா தற்போது ஜெய்ஷ் பூஜாரி இருந்த பெலகாவி சிறையில் தான் தண்டனை அனுபவித்து வருகிறார். தீவிரவாதி அப்சர் பாஷாவை கைது செய்ய நாக்பூர் காவல்துறையினர் பெலகாவி சென்றுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.