மேற்கு வங்கத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ், தனது கிளைகளைப் பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், கோவா மாநிலத்தையும் திரிணாமூல் குறிவைத்து வருகிறது.
இந்தச் சூழலில், கோவாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, மம்தா பானர்ஜி கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில், இன்று (30.10.2021) செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியால் பிரதமர் மோடி, இன்னும் வலிமை வாய்ந்தவராக இருக்கப்போகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா கூறியுள்ளதாவது,
எல்லாவற்றையும் என்னால் இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் (காங்கிரஸ்) அரசியலைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காங்கிரஸால் மோடி இன்னும் வலிமை மிக்கவராக ஆகப்போகிறார் ஒருவரால் (காங்கிரசால்) முடிவெடுக்க முடியாவிட்டால் அதற்காக நாடு ஏன் பாதிப்புக்குள்ளாக வேண்டும்?
அவர்களுக்கு [காங்கிரஸுக்கு] கடந்த காலத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் பாஜகவிற்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக, என் மாநிலத்தில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டனர். பிராந்தியக் கட்சிகள் வலுவாக இருக்க வேண்டும் என்றும், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு வலுவாக இருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். மாநிலங்களை வலுவாக மாற்ற வேண்டும். மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் மத்திய அரசு பலமாக இருக்கும்." இவ்வாறு மம்தா தெரிவித்தார்.
இதற்கிடையே, கோவாவின் மபூசா சந்தைக்குச் சென்ற மம்தா, அங்குள்ள கடைக்கார்களிடம் உரையாடியதும் குறிப்பிடத்தக்கது.