நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்தியா கூட்டணியில் இருந்த பல்வேறு கட்சிகள், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய லோக் தளம் என ஒவ்வொன்றாக பா.ஜ.க கூட்டணியில் இணைந்து வருகிறது. இதனையடுத்து, பா.ஜ.க கூட்டணியில் ஏற்கனவே பிரிந்து சென்ற பஞ்சாபில் உள்ள பிரபலமான கட்சி தற்போது மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 12 பேரோடு சேர்த்து அவரும் பா.ஜ.கவில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த பின்னர் முன்னாள் முதல்வர் அசோக் சவான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்கிரஸ் காரிய கமிட்டி மற்றும் காங்கிரஸ் முதன்மை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளேன். நான் எந்த கட்சியிலும் சேர வேண்டும் என்பதை முடிவு செய்யவில்லை. எந்த கட்சியில் சேர்வது என்பது குறித்த எனது நிலைப்பாட்டை இரண்டு நாட்களுக்குப் பிறகு தெளிவுபடுத்துவேன். காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.விடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று கூறினார்.