
இந்தியா முழுக்க தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், கடந்த 2 வாரங்களாக சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 120 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் தக்காளி விலை கிலோ ரூ. 150-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே, வியாபாரிகள் தக்காளியைப் பதுக்கி வைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால், தக்காளியைப் பதுக்கினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தக்காளி விற்று விவசாயி ஒருவர் கோடீஸ்வராரான சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசித்து வருபவர் விவசாயி துக்காராம் பாகோஜி. இவர் தனது தோட்டத்தில் 12 ஏக்கரில் தக்காளி விளைவித்திருந்தார். இந்தியா முழுவதும் தக்காளியின் விலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் விலையேற்றத்தால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தக்காளி விற்றதன் மூலம் அவருக்கு ரூ.1.5 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.