டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி டெல்லியைச் சேர்ந்த ரிஷப் சர்மா, வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, ரீபக் கன்சலின் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த பொதுநல மனுவில், 'டெல்லியில் விவசாயிகள் அதிகளவில் கூடியுள்ளதால் கரோனா தொற்றுப் பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சாலைகளை மறித்துப் போராடுவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தனர்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என சரமாரி கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர். மேலும் இந்த வழக்கில் விவசாய சங்கங்கள் எதிர் மனுதாரர்களாக இணைய அனுமதி வழங்கி, வழக்கு விசாரணையை இன்று (17/12/2020) ஒத்திவைத்திருந்தனர்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, "எந்தவொரு சட்டத்திற்கும் எதிராகப் போராடுவது அரசியலைப்பு தந்துள்ள உரிமை. அதில் தலையிடமுடியாது. ஆனால் அவர்களின் போராட்டம் குடிமக்களைப் பாதிக்கக் கூடாது. விவசாயிகளின் போராட்டத்திற்குத் தீர்வு காணும் வகையில், சுதந்திரமான மற்றும் ஒரு பக்கச் சார்பற்ற குழு ஒன்றை அமைப்பது பற்றி யோசித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படும் வரையில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடரலாம்" என்றார்.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் வரையில், வேளாண் சட்டங்களை அரசு அமல்படுத்தாது என உத்தரவாதம் தர முடியுமா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு, வேளாண் சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டால், விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்கள் எனத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், மீண்டும் டிசம்பர் 23 அல்லது 24 -ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்துள்ளனர்.