பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், சர்ச்சைக்குரிய சாமியார் பாபா ராம்தேவால் நடத்தப்படுகிறது. முழுக்க முழுக்க சுதேசி பொருட்களுக்கான விற்பனை என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், சிம் கார்டு மற்றும் கிம்போ எனும் குறுஞ்செய்தி செயலியையும் அறிமுகம் செய்து உணவு மற்றும் மருத்துவ பொருட்களை விற்று வருகிறது. இந்நிலையில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் பதஞ்சலி உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.
உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாத நிலையில், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகள் பல நோய்களைக் குணப்படுத்தும் என விளம்பரம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அதேநேரம் அலோபதி மருத்துவம் குறித்து அடிக்கடி சர்ச்சையாகப் பேசி வரும் ராம்தேவ்க்கு கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பொய் விளம்பரங்களைப் பரப்புவதற்கு பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பதஞ்சலி மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் விளம்பரங்களில் மீண்டும் தவறான தகவல்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி பாபா ராம்தேவ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.