புதுச்சேரி ரெட் கிராஸ் சொசைட்டி, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இரு வார கண்தான விழாவை முன்னிட்டு கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
கம்பன் கலையரங்கில் தொடங்கிய பேரணியை சுகாதாரத்துறை ரெட் கிராஸ் அமைப்பின் செயலர் லட்சுமிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். கம்பன் கலையரங்கில் இருந்து தொடங்கிய பேரணி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி பாரதி பூங்காவில் முடிவடைந்தது.
இந்த பேரணியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்களை மூடி கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டும், முகத்தில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்தும் கண் தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மேலும் கண் தானம் செய்வதன் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் பேரணியாக சென்றனர்.