![“Even if the Congress wants to open the water; BJP Will not leave” - K. Balakrishnan](http://image.nakkheeran.in/cdn/farfuture/DZlJiV9XtstOyOQOQqOf1gMIEgeIlhwnh987tulRPRI/1694965786/sites/default/files/inline-images/th_4714.jpg)
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நீதிமன்றம் முன்பாக உள்ள பெரியார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், “கர்நாடக அரசாங்கத்தை பொறுத்தவரையில் அங்கு தண்ணீர் குறைவாக இருக்கிறது என்ற ஒரு காரணத்தைக் காட்டி, ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் கூறியுள்ள கட்டுப்பாட்டின் அடிப்படையில், கொடுக்க வேண்டிய தண்ணீரை தொடர்ந்து கொடுக்க மறுப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. மேலும் கர்நாடக அரசு தங்களது அணைகளில் எல்லாம் நீர் நிரம்பியபின்பு, உபரி நீர் வந்தால் மட்டும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்போம் என்று கூறுவது எந்த விதத்திலும் சரியல்ல.
கர்நாடகத்தில் எந்த ஆட்சி வந்தாலும், இதேநிலைதான் கடைப்பிடிக்கிறார்கள். ஒருவேளை தற்போது இருக்கின்ற அரசு, தண்ணீர் திறந்த விடலாம் என்ற மனநிலைக்கு வந்தால் கூட, கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க அதெல்லாம் திறக்கவே கூடாது, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடக் கூடிய ஒரு கட்சியாக தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிபணிந்து கர்நாடக அரசு தமிழகத்தை வஞ்சிப்பது நியாயம் இல்லை” என்றார்.