ஃபேஸ்புக் அரசியல் சார்புடன் செயல்படுவதாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான பொதுக் கொள்கை இயக்குநரான அன்கி தாஸ் பதவி விலகியுள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனமானது இந்தியாவில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட சில விஷயங்களில் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டின. ஆனால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தரப்பு இக்குற்றச்சாட்டை மறுத்துவந்தது. இருந்தபோதிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி மார்க் ஜூகர்பெர்க்கிற்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில், இந்தியாவிற்கான பொதுக்கொள்கை இயக்குநரான அன்கி தாஸ், அவர் வகித்து வந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அன்கி தாஸ் தன்னை பொதுச் சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பியதால் அப்பதவியில் இருந்து விலகியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.