மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி ஜார்கண்டில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதோடு நாடு முழுவதும் உள்ள 47 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகாண்டில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள நாந்தேட் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள் வாக்குப்பதிவில் அதிக உத்வேகத்துடன் பங்கேற்றதற்காக முதலில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தின் திருவிழாவை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாற்றினர். அவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று, தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தின் வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இத்தேர்தல்களில் காட்டப்படும் மனப்பான்மை நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் போட்ட அடித்தளத்தின் விளைவாக, சட்டசபைத் தேர்தலில் வலுவான கட்டிடமாக மாறியுள்ளது. இதுபுதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.