இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி, வரும் 8 ஆம் தேதி மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நிதி ஆயோக் குழு உறுப்பினர் டாக்டர் வி.கே பால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நாட்டில் கரோனா பெருந்தொற்றின் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "நாட்டில் கரோனா தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றுநோயின் நிலை மோசமடைந்துள்ளது. மேலும் கரோனா வழக்குகள் அதிகரிக்கும் வேகம் கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. பிரதமர் மோடி, கரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் பங்கேற்பு மற்றும் மக்களின் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நம்மால் இன்னும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.