
மகளை காதலித்ததால் 19 வயது இளைஞரை கொடூரமாக ஆணவக் கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் பகுதியில் வசித்து வந்தவர் 19 வயதான சாய் குமார். 10ஆம் வகுப்பு வரை படித்த சாய் குமார், படிப்பை நிறுத்திவிட்டு தனது ஊரில் விவசாயம் செய்து வந்தார். இதற்கிடையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, சாய் குமார் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்ததால், பெண்ணின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதனால் பெண்ணின் பெற்றோர், தனது மகளுடனான காதலை கைவிடுமாறு சாய் குமாரிடம் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த ஜோடிகள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தனது பிறந்தநாள் அன்று சாய் குமார் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் தினத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பெண்ணின் பெற்றோர், சாய் குமாரை கோடாரியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சாய் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பெண்ணின் பெற்றோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.