கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சுமார் 3 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இடுக்கி, வயநாடு மாவட்ட விவசாயிகள் இந்த வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதில் மொத்தமாக 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 56,844 ஹெக்டேர் பயிர்கள் நாசமாயின. ரூ.1,400 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் விவசாயத்திற்காக கடந்த ஆண்டு கடன் வாங்கியிருந்த 15,000 விவசாயிகளுக்கு கடனை திரும்ப செலுத்த வேண்டும் என வங்கிகள் நோட்டீஸ் அனுப்பின. வெள்ளம் காரணமாக விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய கடனை ஒரு ஆண்டு காலத்திற்கு விவசாயிகளிடம் இருந்து வசூலிக்க கூடாது என கேரள அரசு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் விவசாய கடன் மற்றும் உதவி தொகைகள் குறித்த திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.