Skip to main content

5 மாநில உயர் அதிகாரிகள் இடமாற்றம்; தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Election Commission action decision about Transfered higher official

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இதற்காகக் கடந்த வாரம் மாநிலத் தேர்தல் பார்வையாளர்களை வரவழைத்து, ஆலோசனை நடத்தி இருந்தது. அதே சமயம் ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முடிவடைய உள்ள சூழலில் அதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்றது. இதனையடுத்து, கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு 5 மாநிலத் தேர்தலுக்கான தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 

அதன்படி, அந்த 5 மாநிலங்களில் நவம்பர் 7 முதல் 30 ஆம் தேதி வரை சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தெலங்கானா உட்பட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல அரசு அதிகாரிகளை அதிரடி இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 5 மாநிலங்களில் உள்ள 25 காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், 9 மாவட்ட ஆட்சியர்கள், 4 செயலர்கள் மற்றும் சிறப்பு செயலர்கள் உட்பட பல உயர் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை ராஜஸ்தானுக்கு வந்து கொண்டிருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஏதேனும் முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்கும் என்பதனைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன்படி, போதைப்பொருட்கள் வரும் வழியான ஹனுமன்கர், கரு மற்றும் பிவாடியின் எஸ்.பி.க்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

அதே போல், தெலங்கானாவில் 13 எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களை இடமாற்றம் செய்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தெலங்கானாவில், போக்குவரத்து செயலாளர், மதுவிலக்கு மற்றும் கலால் துறை இயக்குநர் மற்றும் வணிக வரி ஆணையர் ஆகியோர்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது கடுமையான பணிச்சுமை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு கலால் துறை மற்றும் வணிக வரித்துறைக்கு தனி முதன்மை செயலரை நியமிக்கவும் தெலங்கானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதே போல், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே!'-மோடி அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே' என பாஜக அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு நிறுவனம்  தூர்தர்ஷன். சமீபத்தில் அதன் இலச்சினையின் நிறம் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் பொதிகை என்பதை சமீபத்தில் 'டிடி தமிழ்' என்று மாற்றிய தூர்தர்ஷன் நிறுவனம், அதனுடைய இலச்சினையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காவி நிறம் என்பது ஒரு கட்சியின் அடையாளமாக இருக்கும்போது, இந்த நிறம் மாற்றம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அந்தக் கட்சிக்காக அரசு தொலைக்காட்சி நிறுவனமே கட்டணம் இல்லாமல் பிரச்சாரம் செய்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

தூர்தர்ஷன் மேலதிகாரிகள் இந்த நிறமாற்றம் காவிநிறமல்ல, ஆரஞ்சு நிறம் என விளக்கம் அளித்துள்ளனர்.ஏன் இந்த நிறமாற்றம் தேர்தல் நடைபெறும் போது செய்தார்கள்? அதற்கான அவசரத் தேவை என்ன வந்தது இப்போது? இது அந்தக் கட்சிக்கான அரசியல் ஆதாயத்திற்கானது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

சமீபத்தில் ஏப்ரல் 5 அன்று இரவு 8 மணி மணிக்கு 'கேரள ஸ்டோரி' படத்தை அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒளிபரப்பியது மிகுந்த சர்ச்சையை உண்டு பண்ணியது. கேரள முதல்வர் வேண்டுகோளையும் மீறி இது ஒளிபரப்பப்பட்டது.

ஒரு மதப் பிரிவினரை, ஒரு மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது, எவ்வாறு ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தேர்தல் நேரத்தில் அதை ஒளிபரப்பு செய்யலாம்?

தேர்தல் நேரத்தில் மத மோதலை உண்டு பண்ண ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தூண்டியதாகவே கருத வேண்டியுள்ளது.

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் ஏன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது? தேர்தல் ஆணையம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எல்லாம் இந்திய மக்களின் மனங்களில் எழுந்துள்ளது.

எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் தூர்தர்ஷன் இலச்சினை கலர் மாற்றத்தை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.