லாரில் அதிக சுமை ஏற்றி வந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறையினர் லாரியை சிறைபிடித்து, லாரியின் உரிமையாளரிடம் இருந்து சுமார் ரூபாய் 2,00,500 அபராதத்தை வசூலித்தனர்.
புதிய மோட்டார் வாகன சட்டம், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் அமலானது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது மாநிலங்களில் அமல்படுத்தவில்லை. ஏனெனில், புதிய சட்டத்தின் மூலம் வாகன விதிமீறல், ஹெல்மெட் அணியாதது, காரில் சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்டவைகளுக்காக வாகன ஓட்டிகளிடமிருந்து விதிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அபராத தொகை குறித்து மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி பேசுகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி வசூலிக்கப்படும் அபராத தொகை, அந்தந்த மாநில அரசுக்கே செல்வதாகவும், தேவைப்பட்டால் அபராத தொகையை மாநில அரசுகளே குறைத்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லி மாநிலம் முகர்பா சவுக் பகுதி அருகே அதிக சுமையை ஏற்றி வந்த லாரியை போக்குவரத்து காவல்துறையினர் மடக்கினர். அப்போது லாரி ஓட்டுநருக்கு லாரியில் அதிக சுமை ஏற்றி வந்தற்கு ரூ 56,000, மற்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ 70,000, பல்வேறு விதிமீறல்களுக்காக லாரி உரிமையாளருக்கு ரூ 74,500 அபராதம் என மொத்தம் ரூ 2,00,500 லாரி உரிமையாளரிடம் வசூலித்தனர். இதனால் மற்ற லாரி ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.