![Kerala CM Pinarayi Vijayan has said that it will be a very critical situation if the BJP comes again](http://image.nakkheeran.in/cdn/farfuture/mPoaEx6NswH53sgSwlvNb6Kv5CPDw-ArK0VN38zA8tY/1696846600/sites/default/files/inline-images/993_86.jpg)
மத்தியில் ஆளும் பாஜகவையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தாக்கி பேசிய முதல்வர் பினராயி விஜயன், "3வது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால், நாடு தாங்க முடியாத அபாயத்தை சந்திக்கும். அதற்கு பிறகு வருத்தப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை என்றும் எச்சரித்து பேசியுள்ளார்.
கேரளா, கண்ணூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், மாநில முதல்வருமான பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது பா.ஜ.க.வைத் தாக்கிப் பேசிய அவர், " பா.ஜ.க. மற்றும் ஆர்எஸ்எஸ், சங்கப் பரிவார அமைப்புகள் நாட்டில் உள்ள பன்முகத்தன்மையை அழித்து மத அடிப்படையில் தேசத்தை உருவாக்க முயல்கின்றன. மேலும், பசுக்களை மையப்படுத்தி, எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்பது வரை அடிப்படையாக வைத்து, இந்தியர்களில் ஒரு பிரிவினரை தேச விரோதிகளாக சித்தரிப்பதன் மூலம் வகுப்புவாத மோதல்கள் நாட்டில் நடைபெற்று வருகின்றன.
மதம், ஜாதி என பிரிந்து கிடந்தாலும், அனைவருக்கும் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்தியாவில் இது மாறி வருவது சிறுபான்மை சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை, மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வருமானால், இந்தியா தீர்க்கவே முடியாத ஆபத்து நிலையை சந்திக்கும். அதன் பிறகு வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. எனவே, இந்த ஆபத்து தவிர்க்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கருத்தும் கூட. பாஜகவை தோற்கடித்து, அவர்களை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கும் நோக்கில், மதச்சார்பற்ற குழுக்கள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்த முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது” என காட்டமாகவே பேசினார். மேலும், “மூன்றாவது முறையாக பா.ஜ.க.வால் ஆட்சி அமைக்க முடியாது என்பதை உணர்ந்து தான் சமீபத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சோதனை நடத்தியுள்ளது” என்றார்.