![drdo scientist pradeep kurulkar national security related issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y83R8LU0BCCQwRURnYMQt_DC8UlHHq6yd2jRgYimkuI/1683277949/sites/default/files/inline-images/pradeep-art.jpg)
டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி ஒருவர் தீவிரவாத தடுப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் பிரதீப் குருல்கர் (வயது 60). இவர் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கருதுகின்றனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானி தனது பதவியை தவறாக பயன்படுத்தி, தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு வழங்கி உள்ளதாக தெரிவித்து மும்பை காலாசவுகியில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் விஞ்ஞானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
அலுவலக பணிகளின்போது பிரதீப் குருல்கர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்ட்டுடன் வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். இவர் தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வந்து உள்ளார். மேலும் இவரின் இது போன்ற செயல்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று தீவிரவாத தடுப்பு பிரிவின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.