முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, 1975 முதல் 1977 வரை இந்தியாவில் எமெர்ஜென்சியை அமல்படுத்தினார். இந்த அவரச நிலை பிரகடனம், இன்றுவரை கடுமையாக விமர்சிக்கபட்டு வருகிறது. இந்நிலையில், ‘எமெர்ஜென்சி தவறு’ என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரபல பொருளாதார வல்லுனரான கௌசிக் பாசுவுடன், காணொளி வாயிலாக உரையாடியபோது, ராகுல் காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "எமெர்ஜென்சி தவறானது. அப்போது அதில் நடந்ததற்கும், தற்போது நடப்பதற்கும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி, எந்த நேரத்திலும், இந்தியாவின் அரசியலமைப்பு கட்டமைப்பைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. எங்கள் வடிவமைப்பு அதை அனுமதிக்காது. நாங்கள் அதைச் செய்ய விரும்பினாலும், எங்களால் முடியாது" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் "இங்கே இப்போது ஆர்.எஸ்.எஸ், அனைத்து இந்திய நிறுவனங்களுக்குள்ளும் ஊடுருவி வருகிறது. நீதித்துறை, பத்திரிகைகள், அதிகாரத்துவம், தேர்தல் ஆணையம் என தாக்குதலுக்கு உள்ளாகாதது ஒன்றும் இல்லை. ஒவ்வொரு நிறுவனமும், ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைக் கொண்ட - ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்களால் முறையாக நிரப்பப்படுகின்றன. பாஜகவை தேர்தலில் நாங்கள் தோற்கடித்தாலும், நிறுவனக் கட்டமைப்பில் உள்ள அவர்களின் ஆட்களை எங்களால் வெளியேற்ற முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.