Skip to main content

காங்கிரஸ் குழுவை சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு; இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு?

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Trinamool Congress refuses to meet Congress committee

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை, டெல்லி என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதே வேளையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. 

அந்த வகையில், 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில், தொகுதி பங்கீடு செய்வது குறித்து திரிணாமுல் காங்கிரஸுக்கு, காங்கிரஸ் குழு நேற்று (11-01-24) அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைக்கு மறுத்ததாகக் கூறப்படும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்