மகளிடம் சீண்டலில் ஈடுபட்ட இளைஞனைத் தட்டிக் கேட்ட பெண்ணின் தந்தையை இளைஞர் ஒருவர் பாம்பை விட்டுக் கடிக்க வைக்க முயன்ற சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள காட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்கிற ராஜேந்திரன். இவருக்கு ஒரு மகள் இருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த குண்டுராவ் கிச்சு என்ற 30 வயது நபர் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத அப்பெண் தனது தந்தையிடம் இதனைத் தெரிவித்துள்ளார். ராஜுவும் இளைஞர் கிச்சுவை நேரில் சந்தித்து 'என் மகளிடம் இனி அப்படி நடந்து கொள்ளாதே' என மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிச்சு தன்னை எச்சரித்த ராஜுவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
அதே நேரம் ஆதாரம் இல்லாமல் கொலையை நிகழ்த்திவிட வேண்டும் என நினைத்து அதிகாலை நேரத்தில் பைக்கில் வந்த கிச்சு, ஜன்னல் வழியாக விஷப் பாம்பு ஒன்றை ராஜுவின் அறைக்குள் வீசி உள்ளார். ஆனால், எப்படியோ சுதாரித்துக் கொண்ட ராஜுவின் வீட்டில் உள்ளவர்கள் பாம்பை அடித்துக் கொன்றனர். உடனடியாக வெளியே பார்த்தபோது சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனம் செல்வத்தைத் தெரிந்து கொண்ட ராஜு, வாகனத்தின் எண்ணை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், வந்து சென்றது கிச்சு என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டுக்குள் பாம்பு வீசியதை கிச்சு ஒப்புக்கொண்டார். தொடர்ந்து கொலை முயற்சி வழக்கில் கிச்சு கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கேரளாவில் மனைவியைக் கணவர் பாம்பால் கடிக்க விட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அதேபோன்று ஒரு கொலை முயற்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.